நம்மையறிந்தால்...

 நானும் வாடிக்கிடக்கும் என் வலைப்பூவிற்கு தண்ணீர் தெளித்து புத்துணர்வு அளிக்க வேண்டும் என்று பல மாதங்களாக முயன்று கொண்டே இருந்தேன். நாட்கள் தான் போனதே தவிர உருப்படியாய் ஒன்றும் நடக்க காணோம்.

நேற்று, 2024 புத்தாண்டு பிறந்ததை காரணமாக வைத்து வலைப்பூவை புதுப்பித்து விடலாம் என்று ஓர் எண்ணம். என்ன எழுதுவது? நமக்கு நன்றாக வருவது அடுத்தவர்க்கு அறிவுரை தருவது தான்.  சரி, ஒரு அறிவுரை பதிவோடு மீண்டும் சமூகத்தொண்டை துவக்கி விட வேண்டியது தான் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை இரவு  முதலே புத்தாண்டு வாழ்த்துக்களும், அது தொடர்பான பதிவுகளும் சமூக வலைத்தளப் பக்கங்களில் நிறைய துவங்கின. குறிப்பாக whatsapp statusல். அதில் இத்தனை வருடங்கள் இல்லாத ஒரு நல்ல மாற்றத்தை என்னால் காணமுடிந்தது.  வழக்கமான வாழ்த்துப்பதிவுகளோடு,  பலரும் சென்ற வருடம் தொடங்கிய போது அவர்கள் வாழ்க்கையில் எங்கே இருந்தார்கள், இப்போது எங்கே இருக்கிறார்கள், என்னென்ன சாதித்தார்கள் , என்னென்ன இழந்தார்கள் என்பதாக ஒரு சுய ஆராய்ச்சி செய்து பதிவுகளாக வெளியிட்டிருந்தார்கள்.

அவற்றில் பெரும்பாலானவை, சாதித்தவைகளாகவே இருந்தன. “சென்ற வருடம் நான் வரைந்த ஓவியங்கள், நான் எழுதிய கவிதைகள், பார்த்த புது இடங்கள்”, இப்படியாக பல விஷயங்கள். “சென்ற வருடம் தம்பதியாக இருந்தோம், இந்த வருடம் பெற்றோர் ஆகிவிட்டோம். சென்ற வருடம் வேலை பார்த்து வந்தேன், இந்த வருடம் புது நிறுவனம் துவங்கி விட்டேன்.” என்பது போன்றவையும் இருந்தன. ஒரு சில மட்டுமே வருத்தமானவைகளாக இருந்தன. அவையும், “நான் மீண்டு வருவேன்” ,  என்பதான நேர்மறை சிந்தனையோடு கூடிய பதிவுகளாகவே இருந்தன.

இது எத்தனை நல்ல விஷயம். நாம் எங்கிருந்து எங்கே வந்திருக்கிறோம் என்கிற சுய ஆராய்ச்சி ஒரு நேர்மறையான சிந்தனையின் வெளிப்பாடு. நம்மை மற்றவரோடு ஒப்பிட்டு நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் துன்புறுத்தாமல் நம்மை நம்மோடு மட்டுமே ஒப்பிட்டுகொள்வது.

“அடுத்து என்ன செய்யலாம் என்று நினைத்தால் வெற்றி. அடுத்தவனை என்ன செய்யலாம் என்று நினைத்தால் தோல்வி.” என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது. பலரும் தன்னை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது ஒரு நல்ல அறிகுறியே.

நானும் வாழ்க்கை வியாபாரத்தில் 2023 வரவு செலவு கணக்கை ஒரு முறை சிந்தித்துப்பார்த்தேன். சில இழப்புகளும், சறுக்கல்களும் இருந்தாலும் முதலுக்கு மோசமில்லை என்கிற அளவில் சுமாராகவே இருந்திருக்கிறது. பெரும்பாலும் புத்தாண்டு தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும், ஒரு இலக்கு வைத்துக்கொண்டு வேலை செய்வது நல்லது என்றே தோன்றுகிறது. “இந்த வருடத்தில் வீடு கட்டி விட வேண்டும். புது பைக் வாங்க வேண்டும். புதிதாக எதோ ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்.” இப்படியான இலக்குகள் நிறைவேற முடியாத  புத்தாண்டு தீர்மானங்களில் சேர்த்தியில்லை என்று நினைக்கிறேன்.

“இந்த வருடத்தில் கோபத்தை குறைக்க வேண்டும். உறவுகளை புதுப்பிக்க வேண்டும். அரியர்ஸ் கிளியர் செய்து விட வேண்டும்.” என்பவையாக கூட இருக்கலாம். நிறுவனங்கள் லாப இலக்குகளை நிர்ணயித்து ஆண்டினை துவங்குவது போல ஒவ்வொருவரும் சில நல்ல இலக்குகளை வைத்துக்கொண்டு ஆண்டினை துவங்கலாம். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் லாப நட்ட கணக்கை பார்க்கலாம். அடுத்த வருடம் மேலும் எப்படி முன்னேறலாம் என்று யோசிக்கலாம்.மேலும் இப்படியான சுய பரிசோதனை நம்மை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனின் மாற்றம், சமுதாய மாற்றம் தானே.

 

இந்த, whatsapp statusகளை பார்த்த பின் என் அறிவுரை பதிவுகளுக்கு வேலையில்லை என்று தோன்றுகிறது. “யாரது...இந்த வருடத்திலிருந்து அடுத்தவர்க்கு அறிவுரை கூற கூடாது. என்று நான் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று அங்கே கூச்சல் போடுவது?” அதெல்லாம் என்னால் முடியாது.

 


அனைவருக்கும் 2024 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹே சினாமிகா...!

ஒற்றைக்கொலுசு (சிறுகதை)