ஹே சினாமிகா...!
“ஹே சினாமிகா” ரிலீஸ் ஆகி இன்னியோட ஒரு மாசம் ஆகிடிச்சு. ஆனா, ஒ.டி.டி. ல நாலு நாட்கள் முன்னாடிதான் ரிலீஸ் ஆகியிருக்கு. அதனால இப்போ இந்த ரிவ்யூ சரியாத்தானிருக்கும். முதல் படத்தை இயக்கியிருக்கிற பிருந்தா மாஸ்டருக்கு வாழ்த்துகள். ஆஸ் யூஸ்வல் முக்கோண காதல் கதை தான். ஆனா, வித்தியாசமா சொல்லியிருக்காங்க.
துல்ஹர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் மூணு பேருக்கும் நடுவுல ஆன் ஸ்க்ரீன்ல டப் காம்படீஷன்னா ஆப் ஸ்க்ரீன்ல டிரெக்டர் பிருந்தா மாஸ்டர், மியூசிக் டிரெக்டர் கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஜெயராமன் மூணு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சளைக்காம வேலை செஞ்சிருக்காங்க.
பாண்டிச்சேரியோட அழக நாம பார்க்காத அற்புதமான கோணங்கள்ல கேமரால பதிவு பண்ணியிருக்காங்க ப்ரீதா. கோவிந்த் வசந்தா காதல் கதையோட உயிரோட்டத்தை படம் முழுக்க பொழிஞ்சிருக்கார். குறிப்பாக “யாரிசைக்க வருகுவதோ...” பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரலில் இதயத்தை ஊடுருவுகிறது. பிருந்தா அவர்களுக்கு முதல் படம்ன்னு சொன்னா நம்பவே முடியாது. கதை, வசனம், பாடல்கள் எல்லாத்துலயும் சூப்பரா ஸ்கோர் பண்ணியிருக்கார் மதன் கார்கி.
காஜல் அகர்வால், அதிதி ராவ் ரெண்டு பேர் கிட்டயும் முதிர்ச்சி தெரியுது அட... நான் நடிப்புல சொன்னேங்க. இவங்க ரெண்டு பேரையும் தூக்கி சாப்பிடறா மாதிரி ஒரு பெர்பார்மன்ஸ் துல்ஹர் சல்மான். செம. தூள் கிளப்பிட்டார். குறிப்பா மனைவியோட சல்வார் கம்மீஸ போட்டு கிட்டு பார்ட்டில கலந்துகிற சீன்ல அதகளம் பண்ணியிருக்கார்.
படம் பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே முடிஞ்சிருக்க வேண்டியது. கடைசி பத்து நிமிஷம் மக்கள் இந்த முடிவைத்தான் விரும்புவாங்கன்னு நினைச்சிகிட்டு இழுத்தடிச்சது ஏன்?
இந்த தம்பதிக்கு பெற்றோர், கூட பொறந்தவங்க, அத்தை மாமான்னு சொந்தக்காரங்க யாருமே இல்லையா?
சொந்த வாழ்க்கையில சுற்றியிருப்பவர்களால மதிக்கப்படாதவர்கள் போய் சேர்ந்து தன்னை நிரூபிக்கும் வேலை ஆர்.ஜே வேலையா? நிறைய படங்கள்ல பார்த்துட்டோமேன்னு தோணுது.
இதெல்லாம் படம் பார்க்கும் போது தோணினாலும் சிரிச்சிக்கிட்டே படம் பார்க்கிற ஜோர்ல கேக்க மறந்துடுது.
ஒருத்தரோட அறிவு, அழகு, கவர்ச்சியான பேச்சு இதையெல்லாம் பார்த்து வர்ற காதல் பின்னாள்ல ஏன் சுமையா மாறிடுது? ஏன்னா அவங்க அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு நாம சொல்றதை மட்டுமே செய்யற ரோபோவா மாறிடணும்ங்கிற எதிர்பார்ப்பு தான். கல்யாணத்துக்கு முன்னாடி தேனா இனிக்கிற பேச்சு கல்யாணத்துக்கப்புறம் தொனதொனப்பா மாறிடுது. நம்மளையே உலகம்ன்னு நினைச்சுகிட்டு அவங்க சுத்தி சுத்தி வரும்போது புரியாத அவங்களோட அருமை, அவங்க பிரிவுல புரியுது. நான் சராசரியா வீட்டுல இருக்கிற பெண்களோட நிலைய சொல்லல. படத்துல துல்ஹர் சல்மான்னோட நிலைய தான் சொன்னேன்.
படம் ஜியோ சினிமாலயும் நெட்பிளிக்ஸ்லயும் ரிலீஸ் ஆகியிருக்கு. கருத்துக்கும் காமெடிக்கும் பஞ்சமில்லை. தாராளமா பார்க்கலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக